Loading

“இது மகள்ட பேக் தம்பி. அவாட பேக்கயே அவாவ தேட பயன்படுத்துறன். எல்லா ஆவணங்களும் இதுக்குள்ளயேதான் இருக்கு. பேக் பழசாகி கிழியத் தொடங்கியும் விட்டது. ஆனால், மாற்றத் தோணுதில்ல. அவாட பேக்க, எப்படி ஒதுக்கிப் போடுறது தம்பி...”

“நிறைய பைகள் வச்சிருக்கன் தம்பி. ஒரு பை எவ்வளவு காலம்தான் பாவிக்கிறது. எத்தன இடங்களுக்குப் போய் வந்திட்டம், எத்தன அடிபிடிகளுக்கு மத்தியில போராட்டங்கள் நடத்தியிருக்கம். அப்போதெல்லாம் பைகள் கிழிபட்டுப் போயிடும். இந்தப் பை ஒரு நாலு மாசமா பாவிக்கிறன்.”

“நீண்டகாலமா எந்தப் போராட்டங்களுக்கும் போகவே இல்ல. அலுத்தப்போயிடுச்சி. மகன்ட ஆவணங்கள் எல்லாம் சும்மா ஒரு பைலதான் வச்சிருக்கன். முன்னர் நல்ல பைகள் இருந்தது தம்பி. இப்ப எங்கயும் போறதில்லதானே...”

“இந்த 13 வருஷமா இந்தப் பையதான் வச்சிருக்கன். இதுலதான் என்ட மகன்ட படத்தயும் ஆவணங்களையும் பாதுகாப்பா வச்சிருக்கன்.”

காணாமலாக்கப்பட்ட தங்களுடைய அன்பிற்குரியவர்களை தேடி 2000 நாட்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கில் தொடர் போராட்டங்களை உறவுகள் மேற்கொண்டுவருகிறார்கள். தொடர் போராட்டமாக இது இடம்பெற்று வந்தாலும் பிள்ளைகள், கணவர், மனைவி, சகோதர சகோதரிகள் காணாமலாக்கப்பட்ட தினத்திலிருந்து - குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்ததிலிருந்து உறவுகளின் போராட்டம் உயிர்பெறத்தொடங்கியது. அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை பல அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள், தாக்குதல்களுக்கு மத்தியில் தளராத துணிவோடு அவர்கள் போராடிவருகிறார்கள்.

இந்த நீண்ட போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளோடு அவர்களுடைய அன்பிற்குரியவர்களின் நினைவுகளை சுமந்த பைகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. சில பைகள் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன, சில பைகள் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொள்கின்றன. சில பைகள் துணையிழந்து தனிமையடைகின்றன. இன்னும் சில பைகள் நம்பிக்கையிழந்து வீட்டுக்குள் முடங்கிவிட்டன.

இவ்வாறு பல வலிகளை சுமத்துகொண்டிருக்கும் பைகளூடாக சொல்ல எத்தணிக்கப்பட்டிருக்கும் கதைகள் இவை.

"2008.11.17 அன்றுதான் என்ட மகன இறுதியா கண்டு பேசினனான். அதுக்குப் பிறகு அவர காணவேயில்ல. எல்லா முகாமுக்கும் போய் கேட்டுட்டம் தம்பி. அப்படி யாரும் இல்லையென்டு சொல்லினம். பூஸா முகாம், நான்காம் மாடிக்கும் போனனான்.

எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம். எங்கட புள்ளய தந்தா காணும். எங்களுக்கு சாமான் தந்தாலும் காசு தந்தாலும் புள்ளைகள் மாதிரி வருமா தம்பி? உங்களைப் போய் மகன்னு சொன்னா அம்மானு சொல்லுவீங்களா?

எல்லாத்தயும் இழந்திட்டு இருக்கிறம் தம்பி. என்ட மகளின்ட கணவர் ஷெல் தாக்கி இறந்திட்டார். அப்பா இல்லாத ஒரு பிள்ளையோடு பல கஷ்டங்களுக்கு மத்தியில மகள் வாழ்றா. 6 வயதுதான் இருக்கும், என்ட கடைசி மகன். ஷெல் தாக்கி அவனும் என் கண்முன்னே இறந்திட்டான் தம்பி... இப்ப இருந்தா அவனுக்கு 18 வயதிருக்கும்...

கடைசியா சண்ட நேரம் மகன கண்டதா ஆக்கள் சொன்னவங்கள். சில நேரம் ஆமிக்காரன்ட போய் சரணடைஞ்சிருக்கலாம்.

2010 ஆனந்தகுமாரசுவாமி முகாமில வைத்து என்ட மகன இராணுவம் கொண்டுவந்து காட்டியிருக்கினம். சத்தியநாதன் சசிகுமாரின் தாய், தந்தை, உறவுகள் இருந்தால் வருமாறு சொன்னத சனம் கண்டு சொன்னவங்க. அப்போ நாங்க தூர இருந்ததால எங்களால வந்து சேர முடியல்ல. நாங்க வாரதுக்குள்ள மகன கொண்டு போயிட்டாங்க. அப்படியென்டா என்ட மகன் உயிரோடதானே தம்பி இருக்கனும்...

நான் கோயிலுகெலுக்கெல்லாம் போறதில்ல. நல்ல காரியங்கள் எதுக்கும் போறதில்ல. செத்த வீட்டுக்கு மட்டும்தான் போவன். நல்ல காரியங்களுக்கு போனா கதை கேட்பாங்க. உங்க புள்ள என்ன மாதிரி என்று... அழவேண்டிய ஒரு சூழல் வரும். அதுக்காக வேண்டி நான் போறதில்ல.

2019 மட்டக்களப்பில ஒரு கோயிலுக்குப் போனனான். அங்க இருந்த ஐயா காசு வாங்க மாட்டார். ரூபா 100 மட்டும் கோயிலுக்கு காணிக்கை போடனும். நான் போனவுடனே சொல்லிட்டார், “நீங்க வெகுதூரமிருந்து வாறீங்க, பசி பட்டினியா இருந்து வாறீங்க. ஆனால் வந்ததில எந்த பிரயோசனமும் இல்ல, உங்கட புள்ள இருந்தது உண்மை. மற்றப் பிள்ளைகள கண்ணும் கருத்துமா பார்த்துக்கொள்ளுங்க. இதுக்கு மேல ஒன்றும் கேட்கவேண்டாம்” என்று சொன்னார். அங்க இருந்து வீடு வரும் வரைக்கும் அழுது கொண்டேதான் வந்தனான். அங்க நடந்த எதையும் வீட்ட ஒருத்தருக்கும் சொல்லேல. மனதுக்குள்ளேயே வச்சுக்கொண்டு இருக்கன். தம்பி (மகன்) இருக்கிறானாம், வீட்டுக்கு வருவான் என்று சொன்னவங்க என்று வீட்ல இருக்கிறவங்களுக்குச் சொன்னனான்."

சத்தியநாதன் இந்திராகாந்தி (வயது 57)

மகன்: சசிகுமார் (வயது 21)

"அம்மாவுக்கு ஏலாது, அண்ணாவ பற்றி நினைச்சு நினைச்சு இப்ப அவாக்கு நோய். நடக்கவும்மாட்டா. இப்ப எந்தப் போராட்டத்துக்கும் அம்மாவால போக முடியாது. அப்பாவும் நானும்தான் போவம். அப்பாவுக்கும் ஏலாது, அவருக்கு இப்போ 66 வயது. அவரின்ட உழைப்பாலதான் நாங்க சாப்பிடுறம்.

வீட்ட மூத்த அண்ணா இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அவர் வேலை செய்து எங்கள வடிவா பார்த்திருப்பார். 2009.02.18 அன்றுதான் அம்மா கடைசியா அண்ணாவ கண்டு பேசியிருக்கா. அப்போ அவருக்கு 18 வயதுசுதான் இருக்கும்.

அதுக்குப் பிறகு மாமாக்களும் அண்ணாவ கண்டிருக்கினம். ஆனால், இதுவரை நாங்க காணேல்ல.

2011 முகாமில இருக்கேக்க போன் ஒன்று வந்தது. உங்கட மகன்தான் பேசுறதா அந்தப் பக்கம் இருந்தவர் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அதுக்குப் பிறகு அந்த நம்பரில் இருந்து ஒரு கோலும் வரயில்ல. திரும்ப திரும்ப எவ்வளவு கோல் எடுத்தாலும் போன் ஓப் என்டு வருது.

எல்லா இடமும் போய் கேட்டுப் பார்த்தம். கோயிலுக்கும் போய் கேட்டுப் பார்த்தம் அண்ணா இருக்கிறார் என்றுதான் சொன்னவங்க. நாங்களும் அதே நம்பிக்கையிலதான் இருக்கம். சாகுறதுக்கு முன்னாடி அண்ணா எப்படியும் வந்திடுவார் என்ற நம்பிக்கையிலதான் அம்மாவும் எந்தநேரமும் புலம்பிக் கொண்டிருக்கா."

இறைமகள் (வயது 22)

அண்ணன் - கண்ணன் (வயது 18)

"இராணுவத்தின்ட சரணடைஞ்ச பிறகு அவங்கட பஸ்ஸில மகன் ஏறியிருக்கான். அவனோட எங்களுக்கு தெரிஞ்ச ஒரு தம்பியும் ஏறியிருக்கார். ரெண்டு பேரையும் ஒரு முகாமுல இறக்கியிருக்காங்க. அப்பதான் ரெண்டு பேரும் கண்டு கதைச்சியிருக்காங்க. எங்களுக்கு தெரிஞ்ச அந்த தம்பி இப்ப விடுதலையாகி கல்யாணம் முடித்து இரண்டு பிள்ளைகளும் இருக்கு.

ஒருநாள் மகள் பஸ்ல யாழ்ப்பாணம் போய்க்கொண்டிக்கேக்க அந்தத் தம்பி கண்டு கதைச்சிருக்கார். மகள் அழுது புலம்பியிருக்கா. தம்பிய காணேல்ல, உயிரோட இருக்கானோ தெரியல்ல என்று அழ, “இல்லை அக்கா, அவர் உயிரோடதான் இருக்கார். நான் சுதாகரன கண்டனான், சுதாகரனோடு கதைச்சனான். இடது கால்ல ஒரு காயம், எந்தநேரமும் யோசிச்சுக்கொண்டுதான் இருக்கிறார். தடுப்பு முகாமிலதான் இருக்கிறார். வருவார் அக்கா” என்று மகளிட்ட சொல்லியிருக்கிறார்.

கொழுப்புல இருந்து ஒருநாள் கடிதம் ஒன்று வந்தது. இந்தக் கடிதத்த எடுத்துக்கொண்டு கொழும்புல... எங்கேயோ ஒரு இடம், எனக்கு இப்ப நினைவில்ல தம்பி, அங்க வரச்சொல்லியிருந்தாங்க. வீட்ட யாரும் என்னை கொழும்புக்கு அனுப்ப விரும்பேல்ல. பிறகு அடுத்த நாள் பின்னேரம் 2 மணியிருக்கும், நல்ல மழை, கார்த்திகை மாதம். ஒரு கோல் வந்தது, “ஹலோ புவனேஸ்வரிதானே கதைக்கிறது... உங்கட மகன் இருக்குது, பெயர் சுகாதரன்தானே? நீங்க வவுனியாவுக்கு வாங்க” என்று பேசினவர் சொன்னார். வவுனியா சிஐடிக்குப் போய் விசாரிச்சன். அப்படி எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று சொன்னவ. அதுக்குப் பிறகு ஒரு கோலும் வாரதில்ல. நாங்கள் கோல் எடுத்தாலும் வேலைசெய்யிதில்ல.

வட்டுவாகல் பகுதியில் வைத்தும் மகன சனம் கண்டிருக்கினம். சனத்தோட சேர்ந்து மகன் சாப்பிட்டும் இருக்கிறார். அப்படியெல்லாம் இருந்தவர இப்ப இல்லை என்று சொல்ல முடியுமா? 13 வருடங்களாகிட்டு, எல்லா இடத்துக்கும் போயாச்சி. எங்கேயும் இல்லையென்டு சொல்லினம். அப்படியென்டா தடுப்பில இருந்தவர் எங்கே போனார்?

கோயிலெல்லாம் போய் கேட்டனாங்கள், மகன் இருக்கிறாராம். அம்மா, அப்பா, அக்காவைப் பற்றி யோசிச்சிக்கிட்டுதான் இருக்கிறாராம்.

எனக்கு 72 வயசாச்சி தம்பி. இன்னும் எத்தனை நாள் உயிரோட இருக்கப்போகிறன் என்று தெரியாது. சாகிறதுக்கு முன்னாடி அவன எப்படியாவது பார்த்திடனும் தம்பி..."

புவனேஸ்வரி (வயது 72)

மகன் - சுதாகரன் (29 வயது)

"இடம்பெயர்ந்து பொக்கனையில பங்கருக்குள்ள இருந்தனாங்கள், 2009.04.15ஆம் திகதி என்று நினைக்கிறன். ஷெல் வந்து விழுந்தது. எல்லோரும் ஒவ்வொரு பக்கமாக சிதறி ஓடிட்டம். இவாக்கு (மனைவி) தலையில காயம். அந்த நேரம்தான் என்ட இரண்டாவது மகன தவறவிட்டன். பயத்தால எங்க ஓடினான் என்று தெரியல்ல. இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கன்.

அதுக்குப் பிறகும் அவன கண்டதா தெரிஞ்சவங்க சொன்னவங்க. காயத்தோட இருந்தானா என்று கேட்டதற்கு, இல்ல என்று சனம் சொன்னவங்க. அப்படியென்டா, அவன் உயிரோட இருப்பான்தானே தம்பி. அதனால எங்க போராட்டங்கள் நடந்தாலும் முதல் ஆளா போயிடுவன். எப்படியும் அவன் தேடிக் கண்டுபிடிச்சிடலாம் என்று நம்பிக்கையிலதான் இன்று வரைக்கும் ஓடிக்கொண்டிருக்கன்.

அம்மா (மனைவி) எந்தப் போராட்டங்களுக்கும் போறதில்ல. அவாட தலையில ஷெல் பீஸ் (ஷெல் துண்டு) ஒன்டு இருக்கு. அதை நீக்க ஏலாதாம், நீக்கினா உயிருக்கு ஆபத்தாம். அதோட இப்ப புற்றுநோய் இருக்கென்று ஹொஸ்பிட்டல்ல சொல்லியிருக்கினம். மாதம் இரண்டு கிளினிக் போறா. அவளால எதுவும் செய்ய ஏலாது. போராட்டங்கள் போகமாட்டா, மயக்கம் வந்திடும், நானும் அவள விடுறதில்ல.

தன்டபாட்டிலேயே இருந்து அழுவா தம்பி. மகன் வருவார் என்று நம்பிக்கையில் இருந்தா, இப்ப நம்பிக்கையில்ல என்று சொல்வா. எங்களால என்னதான் செய்யமுடியும். கூலி வேலைக்குப் போய்க்கொண்டுதான் இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் போறன். எவ்வளவு காலம்தான் இப்படியே அலைஞ்சி திரியிறது..."

சின்னத்தம்பி நடராசா (வயது 63)

மகன் - நடராசா ராகுலன் (வயது 18)

"ஒரே யோசன... மண்ட குத்துது தம்பி. எல்லாம் மறந்திட்டுது. திகதி ஒன்றும் நினைவில்ல. எந்தநேரமும் அவா பத்தின யோசனதான். யோசிக்காம எப்படி இருக்கிறது. மூத்த பிள்ளை. கணக்க பிள்ளைகளும் இல்லதானே.

வலைஞர்மடத்த வச்சி மகள ஒருத்தர் கண்டிருக்கார். முகாமுக்கு வந்த பிறகுதான் சொன்னார். நாங்களும் வார வழியில எல்லா இடத்திலயும் தேடிப்பார்த்தனாங்கள். முகாமுல வந்தும் பார்த்தம், எங்கயும் அவா இருக்கேல்ல. வெளியில வந்தும் தேடாத இடமில்ல. எல்லா இடத்திலயும் பதிவு செஞ்சிருக்கனும்.

இப்ப எங்கயும் போறதில்ல. யாராவது கூப்பிட்டா, பஸ் ஏதும் வந்தா மட்டும்தான் போவன். கையில காசு இருந்தா நடக்கிற எல்லா போராட்டங்களுக்கும் போகலாம், இருந்து இருந்துதான் வேலைக்குப் போறன், அந்த காச வச்சிக் கொண்டு என்னத்த செய்றது?

எனக்கு இரண்டு பிள்ளைகள்தான் தம்பி. இவாதான் மூத்தவ. இப்ப இருந்திருந்தா முழுக் குடும்பத்தையும் தனி ஒரு ஆளா பார்த்திருப்பா. இந்த வயசிலயும் வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது."

வேலு மேனகாதேவி (வயது 63)

மகள் - வேலு துஷ்யந்தி (வயது 25)

"அவா இருப்பாளென்று நாங்க நம்பல தம்பி. இத்தன வருஷமாச்சி. இனி எங்க இருக்கப் போறா? நம்பிக்கையில்லாம போயிடுச்சி. கோயிலுக்கெல்லாம் போய் பார்த்தம் தம்பி. மகள் இல்லையென்றுதான் சொல்லினம்.

அவர் (கணவர்) இருக்கும் வரை ஒரு இடம் விடாம எல்லா இடங்களுக்கும் போனார். போராட்டங்கள், முறைப்பாடு செய்யனு அவர்தான் போவார். அப்படி அலைஞ்சி அலைஞ்சி நோய்ல விழுத்திட்டார். ஆறு மாதம்தாம் இருக்கும், அவர் இறந்து. இப்போ என்ட கடைசி மகளோடதான் இருக்கன். அவா உழைச்சிதான் வாழ்க்கைய கொண்டு நடத்துறம்.

இப்ப எங்க போராட்டங்கள் நடத்தாலும் எங்களால போக முடியாது தம்பி. என்னால ஒன்டுமே செய்யமுடியாது. இவா வேலைக்குப் போகனும். இவாவாலயும் போராட்டங்களுக்குப் போகமுடியாது. இத்தனை வருஷமாச்சி, மகள் இருந்தா ஏதாவது தகவல் கிடைச்சிருக்கனும்தானே தம்பி. ஒன்டுமே இல்லையே. அப்படியிருக்கும்போது நாங்க எங்க போய் தேடுறது?

இப்போ எந்த எதிர்பார்ப்பும் இல்ல. போனது போனதுதான். நாங்களும் பார்த்து பார்த்து கைவிட்டுட்டோம். இனி எங்க, புள்ள வரப்போகுது?"

ராகுலன் கனகவள்ளி (வயது 62)

மகள் - ராகுலன் கோகிலவாணி (வயது 23)

"முகாம்ல வச்சி கண்டதா சொன்னாங்க. அப்ப அங்க வியாபாரம் செஞ்ச ஒருத்தர் கிட்ட ஒரு துண்டொன்ற மகள் எழுதிக் குடுத்திருக்கா. “என்னைய எங்க சரி மாத்திடுவாங்க. அம்மா சரி அப்பா சரி வந்து பார்க்கச் சொல்லுங்க” என்று சொல்லியிருக்கா. அந்தத் துண்டு கிடைக்கவே இல்ல. நாங்க அப்ப வலயம் 4 இல இருந்தம். எங்கட சொந்தக்காரங்க ஒருத்தர்கிட்டதான் அந்த வியாபாரி சொல்லியிருக்கார். ஆனால், அந்தத் துண்ட குடுத்தில்ல.

அரசாங்கம் வந்து விசாரிக்கும்போதெல்லாம் இதெல்லாத்தயும் சொல்லியிருக்கன். எல்லா இடத்துக்கும் போயிருக்கன். இப்ப எதுக்கும் போறதில்ல. என்னால ஏலாது. மனுஷியும் புள்ளய நெனச்சி நெனச்சியே செத்துட்டுது. இப்ப நான் மட்டும்தான் தனியா இருக்கிறன்.

இப்ப எனக்கு புற்றுநோய் வேறு இருக்கு. இந்த வயசிலயும் கூலி வேலை செஞ்சிதான் சாப்பிடுறன். ரெண்டு பொம்பளப் பிள்ளைகள் இருக்கு. அவங்க கல்யாணம் முடிச்சி தனிக்குடும்பமாக இருக்காங்க.

இங்க அங்கனு எல்லா இடத்திலயும் சாமி பார்த்து இப்ப எல்லாத்தயும் விட்டுட்டன். வந்தா வரட்டும்னு இருக்கன்."

வீரமலை நடராசா (வயது 78)

மகள் - நடராசா சுலோச்சனா (வயது 18)

"யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது இடம்பெயர்ந்த சனத்த அண்ணன் டிரக்டர்ல ஏத்தி இறக்கிறவர். தன்ட உயிரக்கூட பெருசா நினைக்காம அந்த ஷெல் அடிக்குள்ளயும் அண்ணன் சனத்த ஏத்திக்கொண்டு திரிஞ்சவர்.

2009 தை மாதம் 31 அன்று இடம்பெயர்ந்த சனத்த கொண்டுசென்றபோது அண்ணன் ஷெல்பட்டு காயமடைந்தார் என்று எங்களுக்கு தெரிஞ்ச ஐயா ஒருத்தர் வந்து வீட்ட சொல்லியிருக்கார். உடையார்கட்டு வைத்தியசாலையில் இருப்பதாவும் பெரிய காயமொன்றும் இல்லையென்றும் அவர் சொல்லியிருக்கார். நாங்களும் உடையார்கட்டு வைத்தியசாலையெல்லாம் போய் தேடிப் பார்த்தம். எங்குமே அவர் இருக்கேல்ல. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் வரை அவரை தேடிக்கொண்டிருந்தம். அவர நாங்க காணேல்ல. ஆனால், அண்ணாவ கண்ட சனங்கள் வந்து சொன்னவங்க.

போராட்டங்கள் என்டா அம்மா மட்டும்தான் போறவ. அவவுக்கு இப்போ 55 வயது. முன்னமாதிரி அம்மாவாலயும் ஏலா. அப்பாவுக்கும் ஏலா. சிரமப்பட்டுத்தான் போராட்டங்களுக்குப் போறம்.

எல்லா இடங்களுக்கும் முறைப்பாடு செய்திருக்கம். கடிதங்கள், படங்கள் வழங்கியிருக்கம். அதனால எப்படியும் அண்ணா வந்திடுவார் என்ற நம்பிக்கையோட இருக்கம்."

சுப்ரமணியம் கெளசல்யா (வயது 28)

அண்ணன் - தயாளன் கண்ணன் (வயது 20)

"தேடித் தேடி அலுத்துப் போயிட்டுது தம்பி, அப்படியே நாங்கள் கைவிட்டுட்டம். புள்ள இருந்தா வரட்டும் என்று இருந்திட்டம் தம்பி.

அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது. இந்த வயசுல அவர தேடுறதா இல்ல வயித்துப் பசிக்கு வேலைக்குப் போறதா என்று தெரியாம இருக்கம். என்ன செய்றது தம்பி...?

2009.03.17 மகன வலைஞர்மடத்திலதான் கடைசியா கண்டனாங்கள், நீங்க உள்ளுக்குப் போங்கோ நான் வாரன் என்று சொன்னவர். அவர் வருவார் என்று கடைசிவரைக்கும் இருந்தம். ஏலாத கட்டத்திலதான் வந்தம். இன்ட வரைக்கும் வாரதா சொன்ன மகன் இன்னும் வீடு வந்துசேரல...

“இறுக்கமான கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள இருக்கிறார். ஆனால் அவர் உயிருக்கு ஆபத்து இல்ல. கால்ல மட்டும் காயப்பட்டு இருக்கார்” என்று முகாமில இருந்தபோது, மட்டக்களப்புல, கொழும்புல என்று எல்லா இடத்திலயும் சாத்திரம் பார்த்தப்ப சொன்னவங்க. எல்லா இடத்திலயும் ஒரே மாதிரிதான் சொல்லியிருக்கினம்.

அதேமாதிரி, மகன் முழங்கால்ல காயப்பட்டு இருக்கிறதா இயக்கப் பொடியன் ஒருவனும் சொன்னான்.

வீட்டில மூத்த மகன் தம்பி அவன். இப்போ இருந்திருந்தா, நாங்க ஏன் இப்படி இருக்க? நல்ல வேலை தெரிஞ்சவன். வாகனம் திருத்தும் வேலை செய்துகொண்டிருந்தான்.

இப்ப எனக்கு 67 வயதாகுது. நான் வேலை செய்தால்தான் சாப்பாடு. உடம்புக்கு ஏலாதென்று ஒருநாள் கூட வீட்டில இருக்க முடியாது. மகள் ரெண்டு பேரும் திருமணம் முடிச்சி தனித்தனி குடும்பமா இருக்கினம். இப்போ அவங்களிட்ட போய் உதவி கேக்கிறது சரியில்லதானே தம்பி..."

முருகையா சேகர் (வயது 67)

மகன் - சேகர் ஆனந்தசேகர் (வயது 24)

"மகள் காணாமல்போகேக்க 17 வயது. இப்போ அவாக்கு 30 வயது. நாங்க எல்லாம் ஒன்டாதான் இருந்தம். 2009.03.17 அன்று நாங்கள் இருந்த இடத்துக்கு சரமாரியா ஷெல் அடிச்சவங்க. அந்த நேரம்தான் என்ட மகள் எங்கேயோ பயத்தில தவறி போயிட்டா. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் வரைக்கும் எல்லா இடத்திலயும் தேடிப் பார்த்தம். எங்கயும் அவா இருக்கேல்ல. முகாமிலயும் விசாரிச்சனாங்கள். அதில எங்கட போராட்டம் ஆரம்பிச்சதுதான், இன்றுவரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கு.

பரணகம ஆணைக்குழு, போராட்டங்கள் என்று எதையும் விடுறதில்ல. தவறவிடாம எல்லாத்துக்கும் போறனான். பிள்ளை எங்கயாவது இருக்கும், தேடித்தந்திடுவாங்க என்ற நம்பிக்கை ஒரு இடத்தயும் தவறவிடுறதில்ல.

வீட்டால சாமியெல்லாம் பார்த்திருக்கினம். மகள் உயிரோடதான் இருக்கறதா சொல்லியிருக்காங்க. பன்னிரண்டு பதிமூனு வருஷமாச்சி, எந்த முடிவும் தெரியுதில்ல.

எனக்கே இப்ப 57 வயசாயிடுச்சி. என்னால முடிந்த வரைதான் இந்தப் போராட்டங்களுக்குப் போகலாம். அதுக்குப் பிறகு முடியாதுதானே. இப்படியே இழுபட்டு இழுபட்டு என்ன நடக்கப்போகுதுனு தெரியல. காணாமல்போன ஆக்களின்ர சங்கத்தின்ட தலைவிமார், பிள்ளைகள் இருக்குனுதான் சொல்றாங்க. முயற்சிய கைவிடாம வாங்க, பிள்ளைகள் இருக்கு பிள்ளைகள் இருக்குதுனுதான் சொல்றாங்க. நாங்களும் அதனாலதான் போறம்.

பத்தோட பதினொன்றா கத்திப்போட்டு வாறதுதான், பஸ்ல போய் இறக்கிவிடுவாங்க, கொடிய பிடிச்சிக் கொண்டு போவம், பந்தத் பிடிச்சிக்கொண்டு போவம். செயற்பாட்டாளர்கள் கோஷமெழுப்புவாங்க, நாங்களும் அவங்க பின்தொடர்ந்து போய் கோஷமிடுவோம். எங்களால என்ன செய்ய முடியும், எங்களால ஒன்னுமே செய்யமுடியாது."

சத்தியநாதன் விஜயேந்திரன் (வயது 57)

மகள் - தமிழினி (வயது 17)

"மருமகன் இயக்கத்தில் இருந்தவர். கடைசி போர் காலப்பகுதியில எங்களோடயே வந்தார். மகளுக்கும் அவருக்கும் 2005ஆம் ஆண்டுதான் திருமணம் நடந்தது. 4 வருஷம்தான், ஒன்றரை வயதில ஒரு மகனோட மகளயும் கூட்டிக்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திட்டன். இப்போ பேரனுக்கு 15 வயசு, பத்தாமாண்டு படிக்கிறான். அப்பா பற்றி பெருசா அவருக்கு நினைவில்ல.

முள்ளிவாய்க்கால்ல மருமகன கண்டதா வந்த ஆக்கள் சொன்னவ, நாங்களும் கடைசி வரை காத்திருந்தோம். 2009 மே மாதம் 17ஆம் திகதிதான் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் வந்தனாங்கள். வந்தால் எப்படியாவது கூட்டிக்கொண்டு வந்திடலாம் என்று இருந்தனாங்கள். எங்களால அவர கண்டுபிடிக்க முடியல்ல.

மகள் கூலி வேலைக்குத்தான் போறா. போராட்டங்கள், பேரணிகளுக்கெல்லாம் அவ வரமாட்டா. எங்கள அவாதான் பார்த்துக்கொள்றா. எங்களுக்கென்று யாரும் இல்ல. நான்தான் எல்லா போராட்டங்கள், பேரணிகளுக்கென்று போவன். சிலநேரம் மனைவி போவா, யார் கூப்பிட்டாலும் எங்கு கூப்பிட்டாலும் போவம். எங்கள மாதிரியே மருமகன்ட தாயாரும் போராட்டங்களுக்கு போறவ.

மருமகன் எங்கயாவது உயிரோடு இருப்பார், எப்படியும் தேடி வந்திடுவார் என்றுதான் மகளும் நம்பிக்கொண்டிருக்கா. நாங்களும் இன்னும் எத்தனை நாள்தான் உயிரோடு இருக்கப் போறம். எங்களுக்குப் பிறகு அவளுக்குத் துணையா யார் இருப்பா? அவர் எப்படியாவது வந்திடுவார் என்று நாங்களும் அதே நம்பிக்கையிலதான் இருக்கிறம்."

சி. தர்மலிங்கம் (வயது 75)

மருமகன்: புவனேஸ்வரன் (வயது 33)

"மகள் இயக்கத்தில நில அளவையாளரா வேலை செய்தவ. அவா ஆயுதம் ஏந்தி எந்த இடத்திலயும் சண்டை பிடிக்கல்ல தம்பி. ரெண்டு மகள்ல மூத்தவ இவதான். கடைசியா 2009 மாசி மாதம் மாத்தளன்ல வச்சி கண்டனான். அதுக்குப் பிறகு எந்தத் தகவலுமே இல்ல தம்பி.

மட்டக்களப்பு, திருகோணமலையெல்லாம் போய் மனைவி சாமி பார்த்திருக்கா. எல்லா இடத்திலயும் மகள் இருக்கிறா என்றுதான் சொல்லியிருக்கினம். நாங்களும் அத நம்பிக்கொண்டிருக்கினம். எப்படியாவது வந்துசேர்ந்திடுவா என்று.

இங்க பக்கத்தில ஏதாவது போராட்டம் நடந்தா மட்டும் போவன். அதுவும் எல்லாத்துக்கும் போக முடியாது. வேலைக்கும் போகனும், ஒரு நாள் போராட்டத்துக்குப் போனா சாப்பிடுறதுக்குக் கூட வழியில்லாம போயிடும்.

முன்னமாதிரி என்னால ஒன்டுமே ஏலாது தம்பி. எல்லாம் மறந்துபோயிடுது. முழுசா எல்லாம் மறந்துபோறதுக்கு முன்னாடி அவா வந்திடனும்... அவள எப்படியாவது பார்த்திடனும்... அவா இறந்திட்டானு சொல்றாங்க... அதற்கான கிரியைகள் எல்லாம் செய்றாங்க தம்பி. நான் அதையெல்லாம் நம்பல்ல. அவ எங்கேயோ இருக்கா... அதுமட்டும் எனக்குத் தெரியும் தம்பி."

முத்தையா மகாலிங்கம் (வயது 62)

மகள் - நிசாந்தினி (வயது 25)

Created By
Selvaraja Rajasegar
Appreciate

Credits:

Author