Text and photos by Selvaraja Rajasegar
பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி முகாமொன்று இல்லாத காரணத்தால் முகாமொன்றை நிர்மாணிக்கத் தங்களுக்கு 50 ஏக்கர்கள் தேவைப்படுவதாகவும் மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இராணுவம் கோரியிருக்கிறது. போர் தீவிரமாக இடம்பெற்றதாலும், மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டதாலும் 75 குடும்பங்களும் அங்கிருந்து வெளியேற சம்மதித்திருக்கிறார்கள். அவர்களுள் 21 வயதான ரத்னமாலியும் மீண்டும் தன்னுடைய நிலத்துக்கு எப்போதாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு குழந்தையுடன் வெளியேறியிருக்கிறார்.
பொத்துவில் – பாணம பிரதான பாதைக்கு அருகாமையில் ஒதுக்கப்பட்டிருந்த மாற்றுக் காணிகளை மக்களோடு சேர்ந்து ரத்னமாலியும் துப்பரவு செய்திருக்கிறார். காணி அளவீட்டாளர் ஒருவரைக் கொண்டு காணிகளையும் அளவீடு செய்வதற்காக பணமும் வழங்கியிருக்கிறார். ஆனால், இன்றுவரை ரத்னமாலி உட்பட சாஸ்த்ரவல மக்களுக்கு மாற்றுக் காணிகளும் வழங்கப்படவில்லை, தங்களுடைய பூர்வீக நிலங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவுமில்லை.
விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்திய மக்கள் அங்கிருந்து வெளியேறிய காலம் முதல் உறவினர் வீடுகளில் மூன்று, நான்கு குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் காணி அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றன. சாஸ்த்ரவல பகுதியில் இருந்தபோது பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகள், வீடுகள் இருந்ததற்கான இடிபாடுகள், அத்திவாரங்கள் போன்றன மக்கள் அங்கிருந்தமைக்கான ஆதாரங்களாக தற்போதும் இருக்கின்றன.
“மஹிந்த ராஜபக்ஷ கைப்பற்றிய காணிகளை மீட்டுத்தருவோம், நல்லாட்சியை நிறுவுவதற்கு பங்களியுங்கள்” என்று வாக்கு கேட்ட மைத்தரி - ரணில் கூட்டணியும் அந்த மக்களின் காணிகளைச் சுருட்டிக் கொள்ளவே திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கின்றது.
ரத்னமாலி உட்பட சாஸ்த்ரவல பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த வருடம் (2017) செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி தங்களை பூர்வீக நிலங்களில் குடியேற அனுமதிக்குமாறு கோரி சாஸ்த்ரவல விமானப்படை முகாமுக்கு அருகே தொடர் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்கள். உடனடியாகவே செயற்பட்ட நல்லாட்சி அரசாங்கம் அரச அதிகாரிகளை அனுப்பி உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் அதுவரை போராட்டத்தைக் கைவிடுமாறும் கோரியிருந்தது. ஆனால், இன்று வரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறிய வீடொன்றில் தனது பெரியம்மாவின் குடும்பத்துடன் தற்போது 3 பிள்ளைகள், கணவருடன் வாழ்ந்துவரும் 41 வயதான ரத்னமாலி, தனது பூர்வீக நிலத்தில் எவ்வாறு வாழ்ந்தார் என்பது குறித்தும், இப்போது நிலமின்றி, சொந்தங்கள் இன்றி, பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் இவ்வாறு தனது கதையைக் கூறுகிறார்.
"இங்கு வாழ்வது கஷ்டமாக இருக்கிறது. உயிரனமொன்றை தான் வாழும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசென்று வாழவைப்பது போன்றுதான் இப்போது எமது வாழ்க்கை இருக்கிறது. எமது நிலத்துக்குப் போவதற்கு ஆசையாக இருக்கிறது என்பதை விட கட்டாயம் போகவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். இப்போது நாங்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்."